Published:Updated:
விஜய்
 
விஜய்
 

‘தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது. ஆகவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசம் தேவை’ என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் குறிப்பிட்டார். தமிழக மக்களைப் பொறுத்த அளவில், தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். த.வெ.க-வின் வாக்குறுதிகள் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெறுகின்றன.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அவற்றில், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் ஆண்டுக்கு இலவசமாக 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இளங்கலைப் பட்டம் முதல் ஆய்வுப்பட்டம் வரை பிணையில்லா கல்விக்கடன், பெண்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்துப் பயணம், திருமணத்துக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் ஆகிய வாக்குறுதிகள் குறிப்பிடத்தக்கவை.

முதல்வராகப் பதவியேற்ற மேடையிலேயே, இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோரின் வீடுகளுக்கு 200 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புத் திட்டம் ஆகியவை தொடர்பான கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது குறித்து வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டோம்.